பக்கங்கள்

வெள்ளி, 15 மார்ச், 2013

ஒட்டகமும் புலிகேசியும்


ஒட்டகமும் புலிகேசியும்

Posted on 6:07 PM by நீச்சல்காரன்


போர்க்களத்தில் புட்பால்(கால்பந்து) ஆடிக்கொண்டிருந்த புலிகேசி அரசரிடம் ஒற்றன் ஒருவன் ஒரு ஓலையைத் தந்து, ஓடிவந்த களைப்பில் மயங்கி விழுந்தான். பசி மயக்கத்தில் அந்த ஓலையை உண்ணத் தொடங்கியது ஓர் ஒட்டகம். அந்த ஒட்டகத்தின் வாயிலிருந்து பிடிங்கி ஓலையைப் படித்துப்பார்த்தார் புலிகேசி. ஏதோ எதிரி நாட்டுப் பெரும் படை ஒன்று இந்நாட்டுப் போர்க்களம் நோக்கி வருவதாகச் செய்தி இருந்தது. அதை அறிந்து புள் பிடுங்க, பந்துபொறுக்கிப் போட, விசில் அடிக்க வந்த படை வீரர்களும், போஸ்டர் ஓட்ட, கொடிபிடிக்க, காலில் விழ கூட்டிவந்த அமைச்சர்களும், மொக்கைபோடவும், சடை போடவும் வந்த அரசிமார்களும், அரசருடன் சேர்ந்து கிலி கண்டனர். யாவரும் செய்வதறியா திகைத்து நின்றனர். தொடங்கியது மன்னரின் உரையாடல்....


"நமது ஜெட் விமானங்கள் எல்லாம் தயார் நிலையில் தானே உள்ளன"
"விமானமெல்லாம் தயாராகத்தான் உள்ளது ஆனால் அதை ஓட்டுபவர்களெல்லாம் சம்பளப் பாக்கி கேட்டு வேலைநிறுத்தம் புரிகிறார்கள் அரசே!"
"துரோகிகள்! சரி நமது ஏவுகணைகளைக் குறிபார்த்து நிறுத்தி விடலாமா?"
"நமது தொலை நோக்கிகள் எல்லாம் துரு பிடித்துவிட்டன, அதனால் ஏவுகணையைத் தோராயமாகத்தான் ஏவமுடியும். அது விழுமிடத்தில் எதிரிகளை வரவைத்தால், இதைச் சிறப்பாகப் பயன்படுத்தமுடியும் அரசே!"
"உமக்கு ஹுமர் அதிகமாகிவிட்டது அமைச்சரே! அதை விடும், துப்பாக்கியும் தோட்டாக்களும் தயாராகவுள்ளதா?"
"துப்பாக்கி கொள்முதலில் நடந்த ஊழல் காரணமாக, துப்பாக்கிகள் எல்லாம் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது அரசே!"
"ஆமாம் அந்தத் துப்பாக்கிகள் இருந்தால் மட்டும் சுட்டுவிடவாப் போகிறது. அடுத்து... எத்தனை துணை இராணுவப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்?"
"நாட்டிலுள்ள உங்கள் சிலைகள் அனைத்தையும் பாதுகாக்கும் பணியில் மும்மரமாகவுள்ளனர் மன்னா!"
"ஆமாம் பாதுகாப்பில்லை என்றால் சிலைகளை உடைத்துவிடுவார்கள். அவர்களை விடும், உடனடியாகக் கிடைக்கக் கூடிய ஆயுதங்கள் என்னதான் உள்ளன?"
"மன்னா! அருங்காட்சியகத்தில் போர்வாள்கள் அதிகமாகவுள்ளன, அவற்றை சாணை பிடித்து பயன்படுத்திக் கொள்ளலாம் அரசே!"
"சபாஸ்! உடனே தொடங்குங்கள் இன்றிரவிற்குள் அனைத்தும் தயாராக வேண்டும், எதிரிகளின் தலை அதில் உருள வேண்டும்"
"ஆனால் அவற்றைச் சாணை பிடிக்கவேண்டும் அவசரமாக 700 ரூபாய் வேண்டும் அரசே!"
"ஐயே! நான் ATM கார்டை அரண்மனையிலேயே மறந்துவிட்டேன் அமைச்சரே. உமது கார்டில் பணத்தை எடுத்து வாளைத தீட்டு!"
"எனது கார்டின் கையிருப்பு 699 மட்டுமே மன்னா!"
"பரவாயில்லை ஒரு போர்வாளை மட்டும் குறைத்துக் கொண்டு மற்றவற்றை இந்தப் பணத்திற்கு சாணைபிடி."
"அதில்வொரு சிக்கலுள்ளது, விடியும் வரை இப்பகுதியில் மின்வெட்டு அமலில் உள்ளது, ATM எந்திரங்கள் பணிபுரியாது மன்னா!"
"அய்யயோ!உடனடியாக இப்பகுதிக்கு மின்சாரம் வேண்டி மின்துறை அமைச்சருக்கு ஒரு போன் செய்யவும்."
"போன் கம்பெனிகாரர்கள் ஐ.டி. புருப் கேட்டு தொலைப்பேசி இணைப்பை நிலுவையில் போட்டுவிட்டார்கள் மன்னா!"
"புறாத் தூது அனுப்புங்கள்."
"புறாக்களெல்லாம் புத்துணர்ச்சி முகாமிற்குச் சென்றுள்ளது அரசே!"
"கார்ட் ஏற்கப்படும் கடைகளுக்குச் சென்று சாணை பிடிக்கவும். அங்கு ஜெனெரேட்டர்கள் இருக்குமல்லவா!"
"ஜெனெரேட்டர்கள் உண்டு ஆனால் டீசல் விலையேற்றத்தால், பற்றாக்குறை உள்ளது"
"ம்ம்.. இந்தக் குதிரை வண்டிகளை அடகுவைத்து சாணை பிடிக்கலாமே"
"இவைகளெல்லாம் வாடகை வண்டிகள் மன்னா! அடகுக்கு ஆணையிடமுடியாது மன்னா!"
"கிழக்கே ஒரு கருங்கல் மலையிருந்தே அதில் நமது வீரர்களை விட்டு தீட்டிக்கொள்ளச் சொல்லுங்கள்"
"அதைத் தான் கிரானெட் குவாரிக்கு விற்றுவிட்டோமே அரசே!"
"சரி, கையிருப்பாக எத்தனை அம்பும் வில்லும் உள்ளன?"
"ஒலிம்பிக் பயிற்சி ஆட்டத்திற்கு எல்லா வில்லும் செலவாகிவிட்டது மன்னா!"
"வேல் கம்புகளவது உள்ளதா?"
"அதில் தான் இந்தக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது மன்னா!"
"வேறு எந்த ஆயுதம் தான் நம்மிடம் உள்ளது?"
"சிகை அலங்காரத்திற்கு எடுத்துவந்த ஒரு கத்திரிக்கோலும், பிளேடும் உள்ளது அரசே!" 

அவமானத்தின் விழும்பில் அரசர் விம்மிக் கொதிக்கையில் அந்த ஒட்டகமே காரித் துப்பியது. ஆனால் உண்மையில் அரசரைப் பார்த்து ஒட்டகம் துப்பவில்லை, ஒற்றன் கொண்டுவந்த மீதி ஓலையை மெல்லமுடியாததால் துப்பியது. எதிரி நாட்டுப் படைகள் எல்லாம் போருக்கு வந்தவையல்ல, திரைப்பட ஒளிப்பதிவிற்கு வாடகைக்கு வந்துள்ளவை என்ற மீதி செய்தியை அந்த ஓலையிலிருந்து அறிந்து துள்ளிக் குதித்து, அந்த ஒட்டகத்திற்கு டாக்டர் பட்டம் வழங்கினார் புலிகேசி. 

பொறுப்புத் துறப்பு: இப்புனைவில் வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் சமகால அரசியல் நிகழ்வுக்கு ஒத்திருந்தால் அது தற்செயலே
by நீச்சல்காரன் thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக