பக்கங்கள்

புதன், 31 அக்டோபர், 2012

கண்களால் காண்பதும் பொய் (காணொளி)


Sunday, October 14, 2012

கண்ணாடியில் முகம்பார்க்கும் குரங்கு (காணொளி)

video



கண்ணாடியில் தன் முகத்தையே கண்டு அஞ்சும் குரங்கு (காணொளி),
கண்ணாடியில் தன்னைத்தானே கண்டு கொத்தும் குருவி..

ஆகிய இருகாட்சிகளையும் காணும் நமக்கு இவற்றின் அறியாமையை எண்ணிச் சிரிப்பு வந்தாலும்..

நாமும் இப்படித்தான் பல்வேறு சூழல்களில் அறியாமையுடையவர்களாக இருக்கிறோம் என்பதை உள்மனம் சுட்டிக்காட்டுகிறது..

இந்தக் கண்ணாடிபோலவே நம் வாழ்க்கையும் நம்மையே பிரதிபலிக்கிறது.

  • அறியாமையிருக்கும் வரை நமக்குள் 
அச்சம் இருக்கத்தான் செய்யும்.



  • நாம் இந்த உலகத்துக்கு என்ன தருகிறோமோ..
அதையே இந்த உலகமும் நமக்குத் திருப்பித்தருகிறது..


ஆகிய இரு வாழ்வியல் நீதிகளையும் இக்காட்சிகள் வழியே
நான் உணர்ந்து கொண்டேன்..

மேலும் சுவாசிக்க"கண்ணாடியில் முகம்பார்க்கும் குரங்கு (காணொளி)"

Sunday, October 7, 2012

கோபம் வரும்போதெல்லாம்..


  1. கோபம் என்பது கொடிய நோய்..
  2. இந்நோய் தன்னையும் அழித்து தன்னைச் சார்ந்திருக்கும் சுற்றத்தாரையும் அழிக்கவல்லது.
  3. மிக விரைவாக அருகே இருப்பவருக்கும் பரவக்கூடிய நோய்..

  4. கோபத்தைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகள் சொல்லியிருக்கிறார்கள். அதைப் பின்பற்றுவதில்தான் நடைமுறைச்சிக்கல்கள் நிறைய உள்ளது.

    கோபம் வரும்போது..

    தண்ணீர் குடிக்கவும்..
    ஒன்று இரண்டு என எண்ணவும்..
    கண்களை மூடிக்கொள்ளவும்..
    கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்க்கவும்..

    என பல வழிமுறைகள் சொல்லியிருக்கிறார்கள்..
    நம் வள்ளுவர் சொல்கிறார்...

    நீங்க கோபப்படுறீங்களா?
    உங்களுக்கு நீங்களே ஏன் தண்டனை கொடுக்கறீங்க..
    நிலத்தில் தன் கைகளை ஓங்கி அடித்துக்கொண்டவனுக்குக் கை வலிக்காமலா போகும்?
    அதுபோலத்தான் அவன் கொள்ளும் கோபத்தால் அவனுக்கு வலி ஏற்படும். அவன் கோபத்தால் ஏற்படும் துன்பத்திலிருந்து தப்பமுடியாது என்கிறார்.

    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு 
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

    குறள் 307: 
    கோபம் வரும்போதெல்லாம் நான் இந்தக்குறளை நினைத்துக்கொள்கிறேன்..


மேலும் சுவாசிக்க"கோபம் வரும்போதெல்லாம்.."

Monday, September 24, 2012

சில நூல்களும் ஒரு குப்பைத்தொட்டியும்

ஒரு நூலகத்தில் இருந்த குப்பைத்தொட்டி தனியே புலம்ப ஆரம்பித்தது...

இந்த நூலகத்தில் நிறையபேர் பயன்படுத்துவது என்னைத்தான். இங்கு நிறைய சுமப்பவனும் நான்தான். இருந்தாலும் என்னை யாருமே மதிப்பதில்லை. ஆனால் இங்கு யாருமே பயன்படுத்தாத நூல்கள் நிறைய உள்ளன. இருந்தாலும் அவை எதையும் சுமப்பது கூட இல்லை. இருந்தாலும் அந்த நூல்களையே எல்லோரும் மதிக்கிறார்கள். 
என்ன உலகம்டா இது..” என்று தன்னைத்தானே நொந்துகொண்டது குப்பைத்தொட்டி.

சிலநூல்கள் குப்பைத்தொட்டியின் அறியாமை குறித்து வருத்தமடைந்தன. அந்த நூல்களுள் ஒருநூல் மட்டும் குப்பைத்தொட்டிக்கு அறிவுரை சொன்னது...

நாம் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறோம்?  என்பதைவிட
எதற்குப் பயன்படுகிறோம் என்பதல்லவா சிந்திக்கத்தக்கது!

நாம் எவ்வளவு சுமக்கிறோம் என்பதைவிட
எதைச் சுமக்கிறோம் என்பதுதானே விரும்பத்தக்கது!

என்று குப்பைத்தொட்டிக்கு அதன் அறியாமையைச்சுட்டிக்காட்டியது ஒரு நூல்.

இருந்தாலும் குப்பைத்தொட்டி புலம்பிக்கொண்டே இருந்தது. எல்லாம் என் தலைவிதி என்று..


(விதியை எண்ணிப் புலம்பும் மனிதர்களைக் காணும் போது என்மனதில் தோன்றிய சிந்தனையே இக்கதை)
தொடர்புடைய இடுகை



ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவும்!



மேலும் சுவாசிக்க"சில நூல்களும் ஒரு குப்பைத்தொட்டியும்"

Tuesday, September 18, 2012

கிசு கிசு (Gossip)

Gossip

நம்மைவிட நாம் மற்றவர்களைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறோம்..
நடிகர்கள், விளையாட்டுவீரர்கள், அரசியல்வாதிகள், முக்கியபுள்ளிகள்.. என இவர்களின் வரிசையில் நம் உடன் பணியாற்றுபவர், எதிர்வீட்டுக்காரர், பக்கத்துவீட்டுகாரர் என யாரையும் விட்டுவைப்பதில்லை.

ஒருவர் நம்மிடம் சொல்லும் செய்தி உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றியோ.. 
நாம் பிறரிடம் சொல்லும் செய்தி உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றியோ நாம் அதிகம் கவலைப்படுவதில்லை..

ஒரு நகைச்சுவை..

ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் சண்டையிட்டுகொண்டிருந்தார்கள். தீடீரென மனைவி..
இருங்க... பக்கத்துவீட்டில் ஏதோ சண்டைபோல ஒரே சத்தமாக இருக்கிறது.. அதை என்ன என்று கேட்டுவிட்டு நாம அப்புறம் சண்டைபோடலாம் என்றாள் மனைவி..
கணவனும் சரி என்றான். இடைவெளிக்குப் பின்னர் சண்டை தொடர்ந்தது.

இப்படி நம்மிடம் இருக்கும் பலவீனத்தை ஊடகங்கள்நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன 

நாளிதழ், வார, மாத இதழ்கள், தொலைக்காட்சி, இணையம்.. என இதன் வளர்ச்சியில் இப்போது முன்னணியில் இருப்பவை சமூகத் தளங்கள்தான்..

அதனால் தமிழ் உறவுகளே, 

நமக்கு உண்மையென்று சரியாகத் தெரியாத ஒரு செய்தியை நாம் சமூகத்தளங்களில் பகிரும்முன்பு கொஞ்சம் சிந்திப்போம் என்னும் கருத்தை இவ்விடுகை வழியாகத் தங்கள் முன்வைக்கிறேன்.

தத்துவமேதை சாக்கரடீசிடம் ஒருவன் வந்து….


நான் தங்களிடம் ஒருவனைப் பற்றி ஒரு செய்தி சொல்ல நினைக்கிறேன் என்றானாம். அவனிடம் சாக்கரடீஸ் பின்வரும் கேள்விகளைக் கேட்டாராம்.
சாக்கரடீஸ் - நீ சொல்லும் செய்தி உண்மையானதா?
ஒருவன் - எனக்குத் தெரியாது. என்னிடம் இன்னொருவர் சொல்லியது.
சாக்கரடீஸ் - சரி, நீ சொல்லும் செய்தியால் எனக்கோ, உனக்கோ ஏதாவது பயனுண்டா?
ஒருவன் - நிச்சயமாக இருக்காது.

சாக்கரடீஸ் - உண்மையெனத் தெரியாத, உனக்கும் எனக்கும் பயன்படாதவொரு செய்தியை நாம் ஏன் பேசி நேரத்தைச் செலவழிக்கவேண்டும்?


என்று கேட்டாராம் சாக்கரடீஸ்.


நாலு பேரு ஏதாவது சொல்லுவாங்க?


அப்படின்னு ஏதாவதொரு சூழலில் நாம் நினைத்திருப்போம், யாரிடமாவது 

சொல்லியிருப்போம். இல்லையென்றால் யாராவது நம்மிடம் 

சொல்லியிருப்பார்கள்!

யாருங்க அந்த நாலு பேரு? எதுக்காக அவங்களுக்குப் பயப்படனும்?

○ அடுத்தவங்களைப் பற்றிப் பேசுவதையே வேலையாகவோ, 

பொழுதுபோக்காகவோ கொண்டிருப்பவர்களைத் தான் நாலுபேர் என்று 

சொல்லுகிறார்கள்.

○ அந்த நாலு பேர் இன்னொரு நாலு பேருக்கிட்ட நம்மைப் பற்றி உள்ளதையும் 

இல்லாததையும் பேசி நம் மதிப்பைக் குறைத்துவிடுவார்களோ என்று தான் 

எல்லோரும் அந்த நாலு பேருக்குப் பயப்படுகிறார்கள். அந்த நாலு பேரில் 

நாமும் அடக்கம் தான்..

ஆம் நாம் பிறரைப் பற்றிப் பேசாமலோ இருந்திருப்போம்?

ஏதோவொரு சூழலில் ஏதாவது பேசியே இருப்போம்..

சங்கப்பாடல் ஒன்று..


சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி 

மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி 
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச் 
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப 
5 அலந்தனென் வாழி தோழி கானல் 
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல் 
கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ 
நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு 
செலவயர்ந் திசினால் யானே 
10 அலர்சுமந்து ஒழிகவிவ் அழுங்கல் ஊரே

நற்றிணை -149. உலோச்சனார் நற்றிணை


இப்பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு

Greetings to you my friend!

Peering through the side of their eyes,
women in small and big groups look at me
put their fingers on their noses
Gossipand spread gossip about me on our streets.
Hearing that, mother hit me with a swirling small stick.
When my seashore lord comes at midnight
with his fast trotting colorful-maned strong horses
tied to his chariot
riding through the groves treading on fragant flowers,
I desire to leave with him.

Let this slanderous town get lost.
 Translated by Vaidehi

.
தோழி தலைவியிடம் என்ன பேசுகிறாள் என்று கேளுங்கள்…
தோழீ! வாழி! 

நம்மூர்த் தெருவிலுள்ள பெண்களுள் ஓரிடத்தில் சிற்சிலரும் ஓரிடத்தில் பற்பலரும் இப்படியாக ஆங்காங்குத் தெருக்களிலே கூடிநின்று கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி,


தம்தம் மூக்கினுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறித் தூற்றவும்,
அப் பழிமொழியை நம் அன்னை கேட்டறிந்து உண்மையென எண்ணிக் கொண்டு சிறிய கோல் ஒன்றினை ஏந்தி அது சுழலும்படி வீசி அடிப்பவும்; இதனால் நான் மிக்க துன்பமுடையவளாகிவிட்டேன்.



ஆதலின் இத் துன்ப மெல்லாம் தீரும்படி சோலையிலுள்ள புதிய மலர் தீண்டிய பூமணம் வீசுகின்ற நல்ல நிறம் பொருந்திய பிடரிமயிரையுடைய விரைந்து செல்லும் குதிரைபூண்ட நெடிய தேரைச் செலுத்தி, நள்ளிருளில் வருகின்ற தேரையுடைய தலைவனுடன் நீ செல்லவேண்டும் என நான் நினைக்கிறேன். அங்ஙனம் சென்றொழிந்தால் பேரொலியையுடைய இவ்வூர் என்ன செய்யும்? வேண்டுமானால் அலர் தூற்றிக்கொள்ளட்டும்!



தொடர்புடைய இடுகைகள்.






                                                                 1.தெரியுமா செய்தி..










மேலும் சுவாசிக்க"கிசு கிசு (Gossip)"

Saturday, September 15, 2012

புதிய தொழில்நுட்பம்!


ஒரு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். 
பேருந்து கூட்டத்தால் நிரம்பிவழிந்தது.
அடுத்த நிறுத்தத்துக்கு கொஞ்ச தூரம் இருக்கும்போது ஒரு பெண்மணி 

நிறுத்துங்க... என்று மெதுவாகச் சொன்னார்..

நான் நினைத்தேன் இவர் சொல்வது அருகே நிற்கும் நமக்கே மெதுவாகத்தானே கேட்கிறது நடத்துனருக்கு எப்படிக்கேட்கும் என்று..

நிறுத்தமும் வந்தது..

யாரும் இறங்கவேண்டுமா? என்று சத்தமாகக் கேட்டார் நடத்துனர்.

அப்போதும் அந்தப் பெண்மணி மூட்டைமுடிச்சுகளோடு.. 

ஆமா நிறுத்துங்க... என்று மெதுவாகச் சொன்னார்..

நானும் என்னடா இது இந்தம்மா இவ்வளவு மெதுவாச் சொல்றாங்க!வண்டிபோகும் வேகத்துக்கும், ஒலிக்கும் பாடலின் ஒலிக்கும் எப்படி ஓட்டுநர் வண்டியை நிறுத்துவார் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்..

நான் எதிர்பார்த்ததுபோலவே பேருந்து அவர் இறங்கவேண்டிய நிறுத்தத்தைக் கடந்து நீண்டதூரம் வந்துவிட்டது..

அப்போதுதான் அந்தப் பெண்மணி ஐயோ நிறுத்துங்க நிறுத்துங்க நான் இறங்கவேண்டும் என்று கத்தினார்..

உடன்வந்த பயணிகளும் அந்தப் பெண்மணி பாவம் என்று எல்லோருமாகச் சேர்ந்து கத்தி வண்டியை நிறுத்தினர்.

அந்தப்பெண்மணியும் மூட்டைமுடிச்சுகளோடு கீழே இறங்கினார்.

பேருந்து கிளம்பியது.. 
கொஞ்சதூரத்தில் நெரிசல் காரணமாக பேருந்து நின்றது.

உடன் வந்தபயணிகள் பார்த்தீங்களாயா இந்த அம்மா எவ்வளவு விவரம்? 

என்றார்கள். என்ன என்று நானும் திரும்பிப்பார்த்தேன்.

அந்த அம்மா அப்போது இறங்கிய இடம் தான் அவர் வீடு இருக்கிறது.

தன்வீட்டினருகே நிறுத்தச் சொன்னால் ஓட்டுனர் நிறுத்தமாட்டார் என்பதை அறிந்துதான் அந்தப் பெண்மணி இப்படி மெதுவாக...


நிறுத்துங்க... நிறுத்துங்க... என்று சொல்லிவிட்டுத் தன் நிறுத்தம் வந்ததும் சத்தமிட்டு நிறுத்தியிருக்கிறார் என்பதை அறிந்து வியந்துபோனேன்.

வேடிக்கை மனிதர்கள் என நினைத்துக்கொண்ட எனக்கு அப்போது மனதில் தோன்றியது..

இந்தப் பெண்மணி எவ்வளவு புத்திசாலி..!
இந்த நடத்துனர் எவ்வளவு பாவம்..
என்று.. இவர்களைப் போன்ற நடத்துனர்களின் நலனுக்காகவே வந்திருக்கிறது புதிய தொழில்நுட்பம்..

  • நேற்று திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடுக்கு ஒரு தனியார் பேருந்தில் வந்தேன். பேருந்தில் திரையரங்கில் காண்பதுபோல அதிக ஒலியோடு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று அந்த ஒலியைவிட அதிகமான ஒலியோடு தொடர்வண்டிநிலையத்தில் அறிவிப்பு செய்வதுபோல... டிங் டிங் டிங்... என மணியொலியோடு...
                    “பள்ளிப்பாளையத்தில் இறங்கும் பயணிகள் 
இறங்குவதற்குத் தயாராகவும்..”
என்று ஒரு அறிவிப்பு தமிழ் மற்றும் இந்தி மொழியில் வந்தது. வியந்துபோனேன்.

அடுத்து கருங்கல்பாளையம் வந்தவுடன் அதே போல ஒரு அறிவிப்பு..
“கருங்கல் பாளையம் இறங்கும் பயனிகள் இறங்குவதற்குத் தயாராகவும்..” என்று..

ஈரோடு பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தவுடன்...

“ஈரோடு பேருந்துநிலையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.” என்றொரு அறிவிப்பு வந்தது..

தமிழகத்தில், பயணிகளுக்கும் நடத்துனருக்கும் நாள்தோறும் நடக்கும் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல இந்தத் தொழில்நுட்பம் வந்திருக்கிறது. இதே தொழில்நுட்பத்தை எல்லாப் பேருந்துகளிலும் பயன்படுத்தலாமே என்று நினைத்துக்கொண்டே வந்தேன்.

மேலும் சுவாசிக்க"புதிய தொழில்நுட்பம்!"

Thursday, September 6, 2012

வேக வேகமா..

பாய்ச்சல்
வேக வேகமா, உணவைக்கூட வேகாம வேகாம சாப்பிட்டு எங்கே ஓடுறோம்...
எங்கோ ஓடுறோம்..
எல்லோரும ஓடுறாங்க..
நாமும் ஓடுவோம்...

நாம் எந்த வேலை செய்தாலும் அவசரம், அவசரம், அவரசம்..
அதனால் இந்த மண்ணைவிட்டும் அவசரமாகவே சென்றுவிடுகிறோம்.

அந்தக் காலத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் செய்பவர்கள் இருந்தார்கள். ஒரே நேரத்தில் எட்டு செயல்கள் செய்பவர்களை அட்டாவதாணி என்றும் ஒரே நேரத்தில் நூறு செயல்கள் செய்தவர்களை சதாவதாணி என்றும் 
அழைத்தார்கள்.


உங்கள் வேலையை வேகமாக முடிக்க ஒரே வழி
ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் செய்வது

என்றொரு பொன்மொழி உண்டு. பதறாத காரியம் சிதறாது என்ற பழமொழியும் இங்கு சிந்திக்கத்தகதாகவுள்ளது.
என்னுடைய அனுபவத்தில் ஒருவேலையை விரைவாக முடிக்க ஒருநேரத்தில் ஒரு வேலை மட்டுமே செய்கிறேன். 


உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் பாய்ச்சல் என்றொரு கதை நினைவுக்கு வருகிறது...

ரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும்
விறகுவெட்டிக்குப் பக்கத்தில் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.

காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்துபோனது.

'இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது - ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?' என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடரி.

'மரங்கொத்தியால் முடியாது' என்றது கயிறு.
'ஏன் அப்படிச் சொல்கிறாய்?'
கயிறு சொன்னது :-

'நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் வீழ்த்துவதில்லை'



தொடர்புடைய இடுகை


மேலும் சுவாசிக்க"வேக வேகமா.."

Saturday, September 1, 2012

மக்கு மனுசன்.


மக்கு மனுசன்
பயன்படுத்துவதெல்லாம் மக்காப் பொருள்கள்
அதனால் மண்ணே மக்கா போச்சு
மக்கா யோசிங்க...
நாமெல்லாம் மக்கிப் போகலாம்
இந்த மண்ணு மக்காமப் போகலாமா..?

சொல்லும் பொருளும்

மக்கு மனுசன் - முட்டாள் மனிதன்
மக்கா பொருள்கள் - மக்காத பொருள்கள்
மண்ணே மக்காப் போச்சு - மண் மலடாப் போச்சு
மக்கிப் போகலாம் - மறைந்து மண்ணில் கலந்துபோகலாம்
மக்காமப் போகலாமா - மக்கித்தான் போகனும்

தொடர்புடைய இடுகைகள்

                                                                                   அதனால் மரங்களை வெட்டாதீர்கள்
                                                                                நாளைய குடிநீர்
மேலும் சுவாசிக்க"மக்கு மனுசன்."

Monday, August 27, 2012

தெரியுமா செய்தி..?


    ண்மை உலகை ஒரு முறை சுற்றிவருவதற்குள்
    பொய் உலகை மூன்று முறை சுற்றிவந்துவிடும் என்றொரு பொன்மொழி உண்டு.

  1. பிள்ளையார் பால் குடித்தார் என்றதும் நம்பி கையில் பாலோடு சென்றது ஒரு கூட்டம்.

  2. அனுமார் சிலையில் தண்ணீரை ஊற்றினால் பால் வடிகிறது என்றதும் கையில் தண்ணீர் பாட்டில்களைத் தூக்கிச் சென்றது ஒரு கூட்டம்.

  3. ரம்ஜானுக்கு முதல்நாள், கைகளில் மெகந்தி வைத்தவர்களுக்கு மரணம் வரும் என்றதும் மருத்துவமனை நோக்கி படையெடுத்தது ஒரு கூட்டம்.

  4. உடன்பிறந்த பெண்களுக்கு பச்சை, நீலம், மஞ்சள் நிறத்தில் சேலை எடுத்துக்கொடுக்கவேண்டும் என்றதும் துணிக்டையைநோக்கிப் படையெடுதத்து ஒரு கூட்டம்.

  5. ஒரு நாள் கடல்நீர் இனிக்கிறது என்று பெருங்கூட்டம் கூடியது. ஆளாளுக்கு தண்ணீரைப் பிடித்துக் குடித்தது போதாதென்று பாட்டில்களில் நிரப்பிக்கொண்டுவேறு சென்றார்கள். ஆய்வாளர்கள் வந்து ஆராய்ச்சி செய்துவிட்டு சொன்னார்கள். பிறகுதான் தெரிந்தது, கடலின் அருகே இருந்த தொழிற்சாலைக் கழிவுகள் கலந்ததால் அந்தப் பகுதி தண்ணீர் இனிக்க ஆரம்பித்தது என்று. அடுத்து என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லவா வேண்டும்.

  6. திருப்பூரில் பிறந்த குழந்தை பேசியது. தான் அரைமணிநேரம் தான் உயிரோடு இருப்பேன் பிறகு இறந்துவிடுவேன். 4000 குழந்தைகளாவது இறந்துபோவார்கள். அதற்கு தேங்காய் உடைத்து நேத்திக்கடன் செய்யவேண்டும் என்று ஒரு வதந்தி... அதனால் தமிழகத்தில் பல ஊர்களிலும் தேங்காய் விலை உயர்ந்தது.

    என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா..

    கேப்பையில நெய் வடியுதுன்னா
    கேப்பாருக்கு புத்தி எங்கே போகுது..?

    என்பார்கள் மூத்தவர்கள்.

    படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. எல்லோருமே இந்த வதந்திகளை நம்புகிறார்கள்..!

    அந்தக் காலத்திலெல்லாம் 25பைசா அஞ்சல் அட்டையில் ஏதாவது சாமி பெயரோடு கடிதம் வரும் 10 நாட்களுக்குள் இதை 10 பேருக்காவது கடிதவழியே அனுப்பவேண்டும் இல்லாவிட்டார் 10 நாட்களில் நீங்கள் இரத்தம் கக்கி செத்துப்போவீர்கள் என்று வரும். வேறு வழியில்லாமல் பலரும் அந்தக் காலத்தில் அஞ்சல் அலுவலகங்களுக்குப் படையெடுத்தார்கள்.

    இன்று இந்த வதந்தி அதிகமாக அலைபேசிகளில் குறுந்தகவல் வழியே பரவுகிறது.


  • அதனால் வதந்திகளை நம்பாதீர்கள்!
  • குறுந்தகவல் இலவசம் தானே என்று எல்லாவற்றையும் எல்லோருக்கும் முன்னனுப்பாதீர்கள்.


               காலம் மாறிப்போச்சு பாருங்க..


    அன்று
    இன்று..



    தொடர்புடைய இடுகைகள்


    பக்கம் பார்த்துப் பேசு
    பெரிய பொய்

    அதனால் தெரியுமா செய்தி..? என்று யாரும் கேட்டால் அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்..








    நீங்கள் சொல்லும் செய்தி உண்மைதானா என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேளுங்கள்
மேலும் சுவாசிக்க"தெரியுமா செய்தி..? "

Thursday, August 16, 2012

யாருக்கும் வெட்கமில்லை!



  1. உனக்கு அந்த நாள் நினைவிருக்கா..?

    ஆகஸ்ட் 15 நாம இரண்டுபேரும் தேசியக் கொடி வாங்குவதற்காகக் கடைக்குப் போனோம்..

    கடைக்காரன் கொடி தந்தபோது நீ அவனைப் பார்த்துக் கேட்ட பாரு ஒரு கேள்வி..

    வேற கலர் இருக்கா?“ என்று..

    நினைவிருக்கா?

    வெட்கமா இல்லை... சிரிக்காத..

    சுதந்திரத்திருநாள் வாழ்த்துக்கள்.

    என்றொரு குறுந்தகவல் உலவி வருகிறது.


  2. ஒரு காலத்தில் அரசாங்கம் சொன்னது...

    குடிமக்களே வீட்டுக்கு வீடு மரம் வளருங்கள் என்று..

    மக்கள் அரசிடம் கேட்டார்கள்...

    மரம் வளர்க்கிறோம் வீடு தாருங்கள் என்று..


  3. இன்று அரசு சொல்கிறது வட்டியில்லாக் கடன் ஐந்து இலட்சம் ரூபாய் தருகிறோம் வீடு கட்டிக் கொள்ளுங்கள் என்று...

    இன்றும் மக்கள் அரசிடம் கேட்கிறார்கள்...

    நீங்கள் தரும் பணம் வீடு கட்டிக்கொள்வதற்கே சரியாக இருக்கும் நிலத்தை யார் தருவார்கள்...? 
    இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன மரங்களிலா வீடு கட்டிக் கொள்வோம் என்று...


  4. அரசும் கொடுப்பதை நிறுத்தப்போவதில்லை
  5. இந்த மக்களும் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை

    ஏனென்றால் யாருக்கும் வெட்கமில்லை.

    நல்ல கல்வியைத் தவிர வேறு எதையும் அரசு மக்களுக்குக் கொடுக்கவேண்டியதில்லை.
    அப்படிக் கொடுத்தால் அரசு அதற்குப் பதிலாக வேறு ஏதோ எதிர்பார்க்கிறது என்று தானே பொருள்...!

    கொஞ்சநேரம் இருங்க மக்கள் கூட்டமா எங்கேயோ ஓடுறாங்க.. எங்கே என்று  கேட்டுட்டு திரும்பி வருகிறேன்..


    ம்பா.......
    எங்கே எல்லோரும் கூட்டமா ஓடுறீங்க...

    என்னது....
    அரசாங்கம் இலவசமா.... அலைபேசி (செல்போன்) கொடுக்கறாங்களா...???

    தொடர்புடைய இடுகை



மேலும் சுவாசிக்க"யாருக்கும் வெட்கமில்லை!"

Friday, July 13, 2012

அந்த மகராசன் மிக நல்லவன்


ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். மிகவும் 

கொடுமைக்காரன்மக்களை வரிகளால் வாட்டி 
வதைத்துக்கொண்டிருந்தான்.
மக்களுக்கு வீட்டுக்கு ஒரு மூட்டை நெல்கொடுத்தான்அதற்குப் பதிலாக ஒரு மூட்டை அரிசி வாங்கிக்கொண்டான். அதனால் மக்களுக்கு அந்த அரசன் மீது கடுமையான கோபம்.
இவன் எப்படா இறப்பான் என்று மனம் நொந்துபோயிருந்தார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒரு நாள் அந்த அரசன் நோய்வாய்ப்பட்டான்.அப்போது அந்த அரசனுக்கு ஒரு எண்ணம் வந்தது.இத்தனை ஆண்டுகாலம் மிகவும் சுயநலமாகவே வாழ்ந்துவிட்டோம். நாட்டில் ஒருவருக்குக் கூட தன் மீது மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. தன்னை நல்லவன் என்று ஒருவர் கூட சொல்லவில்லையே என்ற வருத்தம் வந்தது. தன் மகனை அழைத்து.“இதே மக்கள் தங்கள் வாயால் என்னை அந்த மகராசன் மிக நல்லவன் என்று சொல்லவேண்டும்“ என்று தன் கடைசி ஆசையைச் சொல்லிவிட்டு உயிர்துறந்தான்.  தன் தந்தையின்  இறுதி ஆசையல்லவா இதை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று முடிவு செய்த இளவரசன் மக்களிடம் கீழ்க்கண்டவாறு அறிவிப்பு செய்தான்.

“ஒவ்வொரு வீட்டுக்கும் நான் ஒரு மூட்டை உமி தருவேன். அதற்குப் பதிலாக நீங்கள் ஒரு மூட்டை அரிசி தரவேண்டும்“  என்பது தான் அந்த அறிவிப்பு.

மக்களுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. அதனை வெளிப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப்பார்த்து தம் தலைவிதி என்று எண்ணிக்கொண்டு இந்த இளவரசனுக்கு அந்த மகராசனே பரவாயில்லை. அவன் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கலாம் 'அந்த மகராசன் மிக நல்லவன்' அவன் நெல்லை கொடுத்துவிட்டாவது அரிசிகேட்டான். இவன் உமியைக் கொடுத்துவிட்டல்லவா அரிசிகேட்கிறான் என்று சொன்னார்கள்..

இறந்துபோன அரசனின் ஆன்மா நிறைவடைந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டான் இளவரசன்.

இப்படியொரு கதை உண்டு.

இந்தக் கதை ஏன் இதோடு முடியவேண்டும்..

இதை இன்றைய சூழலோடு கொஞ்சம் வளர்க்கலாமே..

             அந்த இளவரசனுக்கு முதுமைக்காலத்தில் தன் தந்தையைப் போலவே எண்ணம் வந்தது. நம்ம ஊரு அரசியல்வாதிகளை அழைத்து..

என்னைப் போல மகராசன் உலகத்திலே இல்லை என்று இதே மக்கள் தம் வாயால் சொல்லவேண்டும்“ என்று கேட்டுக்கொண்டான்.


நம்மாளுங்க எப்படிப்பட்டவங்க.

கோடிக்கணக்குல ஊழல் செய்பவர்களுக்கு இது பெரிய செயலா என்ன..?

ஒரு சாக்கை மட்டும் கொடுத்து ஒரு மூட்டை  அரிசி கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்..

வழக்கம் போல புலம்பிக்கொண்டு மக்கள் ஒரு மூட்டை அரிசி கொடுத்தார்கள்.

இப்போது  சொன்னார்கள் அந்த மக்கள் “அந்த மகராசன் மிக நல்லவன்“ என்று இளவரசனை.

இன்றைய அரசியல்வாதிகள் கொடுத்த சாக்கு என்பதை இலவசம் என்றும்
மக்கள் கொடுத்த ஒரு மூட்டை அரிசி என்பதை, மக்கள் தேர்தலில் அளிக்கும் ஓட்டு என்று எண்ணிக்கொண்டாலும் தவறில்லை.




 தொடர்புடைய இடுகைகள்

மேலும் சுவாசிக்க"அந்த மகராசன் மிக நல்லவன்"

Saturday, June 23, 2012

பேச்சுத்திறமை - தென்கச்சியார்.

 உங்க நண்பர் எப்படி இறந்தார் என்று ஒருவர் இன்னொருவரைப் பார்த்துக் கேட்கிறார். அதற்கு இவர்..

“அவன் வயித்துல எலி ஓடுற மாதிரி இருந்துச்சுன்னு சொன்னான் அதான் அவனுக்கு "எலி மருந்து" கொடுத்தேன். அதுக்குள்ள அவனை எலி கொன்னுடுச்சு என்று.



எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.


எந்தஒரு சூழ்நிலையையும், பேச்சுத்திறமையால் ஒருவன் தனக்கு ஏற்றார்போல மாற்றிக்கொள்ளமுடியும்.என்பதற்கு இந்த நகைச்சுவை தக்கதொரு சான்று.

இந்த நகைச்சுவையைப் படித்தவுடன் நினைவுக்கு வந்த தென்கச்சியார் நகைச்சுவை...

                   அமெரிக்காவில் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒருவர் இருந்தார்.     அவரை எதிர்த்து வாதாட ஆளில்லை எனும் அளவுக்கு, தனது வாதத் திறமையால் நீதிமன்றங்களைக் கலக்குவார். பத்திரிகைகளில் அவரை பேட்டியெடுக்க போட்டா போட்டி நடக்கும். ஒரு பத்திரிகையாளர் வித்தியாசமாக அந்த வழக்கறிஞரின் தாயாரை பேட்டியெடுத்தார்.

"உங்கள் பிள்ளை இந்தளவுக்கு புகழ் பெறுவார் என்று நினைத்தீர்களா?"
"அவன் சிறுவனாக இருந்த போதே, சில நிகழ்ச்சிகள் மூலம் அவனது சொல்லாற்றலைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவன் தனது வாய்த் திறமையால் பெரியாளாக வருவான் என யூகித்து விட்டேன்."

"என்ன அது... சொல்லுங்களேன்!"
"ஒரு நாள் சமையலறையில் வேலையாக இருந்தேன். இவன் அப்பா வெளியே செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவன் அறையில் பூனை அலறும் சத்தம் கேட்டது. எப்போதும் பூனையின் வாலை இழுத்து விளையாடுவது அவன் வழக்கம். உடனே நான் அவனை அதட்டினேன்"
"டேய்.. பூனை வாலை பிடிச்சி இழுக்காதே..அது பாவம்" என்றேன்.

அதற்கு அவன் "பூனை வாலை நான் இழுக்கலை. அதோட வாலை அதுவே இழுத்துகிட்டு கத்துது. நான் சும்மா நிக்கறேன்" என்றான்.

எனக்கு குழப்பமாகி விட்டது. உடனே அந்த அறையை எட்டிப் பார்த்தேன். அங்கு பூனை வாலை அவன் மிதித்துக் கொண்டிருந்தான். பூனை வலி தாங்காமல் தன் வாலை இழுத்துக் கொண்டிருந்தது. நடந்த நிகழ்ச்சியை அப்படியே மாற்றிச் சொல்லி ஏற்றுக் கொள்ள வைக்கும் திறமை அவனுக்கு அப்போதே இருந்தது. -இது அந்த தாயாரின் மலரும் நினைவுகள்.

வார்த்தைகளை தனக்கு சாதகமாக்கி, அடுத்தவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வது ஒரு கலை. அது வழக்கின் திசையை மட்டுமல்ல, வாழ்க்கையின் திசையைக் கூட மாற்றவல்லது.
மனஇயல் நிபுணர்கள் என்ன சொல்வது என்ன தெரியுமா?
"எவன் ஒருவன் தன் மீது வீசப்படும் கற்களைக் கொண்டே வலிமையான அடித்தளம் அமைத்து முன்னேறுகிறானோ, அவனே சாதனையாளன் ஆகிறான்"

இக்கதைகளின் வழியே...


  • குழந்தைகளின் விருப்பத்துக்கும், திறனுக்கும் முன்னுரிமைதரும்போது அவர்கள் வாழ்வில் பெரிய வெற்றியை அடைகிறார்கள் என்னும் வாழ்வியல் நுட்பமும் உணர்த்தப்படுகிறது.
மேலும் சுவாசிக்க"பேச்சுத்திறமை - தென்கச்சியார்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக