பக்கங்கள்

சனி, 3 நவம்பர், 2012

வேக வேகமா..


வேக வேகமா..

பாய்ச்சல்
வேக வேகமா, உணவைக்கூட வேகாம வேகாம சாப்பிட்டு எங்கே ஓடுறோம்...
எங்கோ ஓடுறோம்..
எல்லோரும ஓடுறாங்க..
நாமும் ஓடுவோம்...

நாம் எந்த வேலை செய்தாலும் அவசரம், அவசரம், அவரசம்..
அதனால் இந்த மண்ணைவிட்டும் அவசரமாகவே சென்றுவிடுகிறோம்.

அந்தக் காலத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் செய்பவர்கள் இருந்தார்கள். ஒரே நேரத்தில் எட்டு செயல்கள் செய்பவர்களை அட்டாவதாணி என்றும் ஒரே நேரத்தில் நூறு செயல்கள் செய்தவர்களை சதாவதாணி என்றும் 
அழைத்தார்கள்.


உங்கள் வேலையை வேகமாக முடிக்க ஒரே வழி
ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் செய்வது

என்றொரு பொன்மொழி உண்டு. பதறாத காரியம் சிதறாது என்ற பழமொழியும் இங்கு சிந்திக்கத்தகதாகவுள்ளது.
என்னுடைய அனுபவத்தில் ஒருவேலையை விரைவாக முடிக்க ஒருநேரத்தில் ஒரு வேலை மட்டுமே செய்கிறேன். 


உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் பாய்ச்சல் என்றொரு கதை நினைவுக்கு வருகிறது...

ரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும்
விறகுவெட்டிக்குப் பக்கத்தில் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.

காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்துபோனது.

'இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது - ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?' என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடரி.

'மரங்கொத்தியால் முடியாது' என்றது கயிறு.
'ஏன் அப்படிச் சொல்கிறாய்?'
கயிறு சொன்னது :-

'நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் வீழ்த்துவதில்லை'



தொடர்புடைய இடுகை


மேலும் சுவாசிக்க"வேக வேகமா.."

Saturday, September 1, 2012

மக்கு மனுசன்.


மக்கு மனுசன்
பயன்படுத்துவதெல்லாம் மக்காப் பொருள்கள்
அதனால் மண்ணே மக்கா போச்சு
மக்கா யோசிங்க...
நாமெல்லாம் மக்கிப் போகலாம்
இந்த மண்ணு மக்காமப் போகலாமா..?

சொல்லும் பொருளும்

மக்கு மனுசன் - முட்டாள் மனிதன்
மக்கா பொருள்கள் - மக்காத பொருள்கள்
மண்ணே மக்காப் போச்சு - மண் மலடாப் போச்சு
மக்கிப் போகலாம் - மறைந்து மண்ணில் கலந்துபோகலாம்
மக்காமப் போகலாமா - மக்கித்தான் போகனும்

தொடர்புடைய இடுகைகள்

                                                                                   அதனால் மரங்களை வெட்டாதீர்கள்
                                                                                நாளைய குடிநீர்
மேலும் சுவாசிக்க"மக்கு மனுசன்."

Monday, March 26, 2012

எனக்குப் பிடிக்காத ஒரே மதம்!



எல்லோருக்கும் பிடித்த மதம் தான்
உலகிலேயே பெரிய மதம் தான்
எண்ணற்ற பக்தர்களைக்கொண்ட மதம்தான்
எளிய கொள்கைகளைக் கொண்ட மதம்தான்
பரப்பாமலே பரவும் மதம் தான்
என்றாலும்
எனக்கு ஏனோ பிடிக்கவில்லை!
ஆம் அந்த மதத்தின் பெயர்..

“கால தா மதம்

எனக்குக் காக்கவைப்பதும் பிடிக்காது
காத்திருப்பதும் பிடிக்காது
அதனால் இந்த கால தா மதமும் பிடிக்காது!

தொடர்புடைய இடுகைகள்

மேலும் சுவாசிக்க"எனக்குப் பிடிக்காத ஒரே மதம்!"

Saturday, February 18, 2012

முறைமாமன் சீரு.


தமிழ் மரபுகளையெல்லாம் மறந்துவிட்ட இன்றைய தலைமுறையினரிடையேயும் மரபுகளை மறக்காத சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதோ தமிழ் மண்வாசனையோடு ஒருகவிதை..
இதை எழுதியவர் என் மாணவர் திரு.ச.கேசவன் என்பதைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்





முக்கனிகள் சேர்த்தெடுத்து
முறைமாமாமன் சீரெடுத்து
முச்சந்தியில் மக்களெல்லாம்
மூக்கின் மேல் விரலைவைக்க
மேளம் கொட்டி வாராண்டி!

பச்ச ஓலையில
உன்னைப் பூட்டப் போறாண்டி!

பித்தளையில் பாத்திரங்கள்
செப்புதனில் நீர்க்குடங்கள்
தங்கத்துல நகைசெஞ்சு
வாராண்டி!

உன்னத் தங்கத்துல செஞ்ச
வைரமுன்னு சொல்வாண்டி!

பலவனத்துப் பூவினங்கள்
ஊர்மயங்கும் பல நிறங்கள்
மாலையாகக் கோர்த்தெடுத்து
வாரண்டி!

அந்த மாலையில
உன்னக் கட்டப் போறாண்டி!

மொட்டு ஒன்னு மலர்ந்திருச்சி
நாணம் வந்து செவந்திடுச்சி
வண்டு போல மாமன் அவன் வாராண்டி!

உந்தன் நாணத்தை
வெல பேசப் போறாண்டி!

ஊரடக்கிப் பேசியவ
ஊரச்சுத்தித் திரிஞ்சபுள்ள
வாயடச்சி நிற்கிறத
பாருங்கடி!

இப்ப வட்டியும்
முதலுமா வாங்கிக்கடி!

மாமன் அவன் வாங்கிவந்த
பட்டுடுத்தி நடக்கயிலே
ஊருசனம் கண்ணுவெக்கும்
வாருங்கடி..
வந்து இவளுக்குக் கருநிலா
பொட்டெடுத்து வையுங்கடி!

தீட்டு வந்து சேருமின்னு
நல்லெண்ண தலைக்குவெச்சு
நட்டாத்தில் குளிச்சுப்புட்டு
வாராண்டி!

நல்லா கறிசமைச்சு
ஆக்கிப்போட வாருங்கடி..

பெண்ணாகப் பொறந்தவளே
கல்லாக இருந்த உன்ன
செலையாக செதுக்க மாமன்
வாராண்டி!

உன் சிரிப்பெடுத்து
தன்மனசுல கோர்க்கப் போறாண்டி!

ச.கேசவன்
இளம்கலை இயற்பியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு

மேலும் சுவாசிக்க"முறைமாமன் சீரு."

Thursday, February 16, 2012

எல்லோருக்கும் பிடித்த ஒரே மொழி!

பொருளற்ற வாழ்க்கை வாழும்
பொருளற்றவரின் வாழ்க்கையைக்கூட
பொருளற்ற வார்த்தைகளால்
பொருள் பொதிந்த வாழ்க்கையாக்கிக் காட்டும்
பல்கலைக்கழமே குழந்தை!

ங்ங்ககா
அஅஆ
உஉஊ
த்த்த்ததா
ம்மா
ப்பாபு

என்ன மொழி இது!!
ஒவ்வொரும் அவரவர் அறிவுக்கு எட்டியவரை
 மொழிபெயர்த்துச் சொல்கிறார்கள்!

அம்மான்னு சொல்லுதுங்கறாங்க அம்மா
அப்பா சொல்லுதுன்றார் அப்பா
இல்லை தாத்தான்னுதான் சொல்லுதுங்கறார் தாத்தா
இல்லை மாமா சொல்லுதுங்கறார் மாமா.

இப்படி ஆளுக்கொரு ஆசைகளை
மொழிபெயர்த்துக்கொள்கிறார்கள்!

எத்தனையோ மொழிமாற்றி மென்பொருள்கள் 
வந்து என்ன பயன்?

இந்த மழலை மொழியை மொழிபெயர்பதல்லவா
மெய்யான தொழில்நுட்பம்!

நீ - நான் - நாம் 
உயர்திணை - அஃறிணை என
எந்த இலக்கண மரபுகளுமே கிடையாது மழலை உலகில்!

இயற்கையின் படைப்பில் உயர்வென்ன தாழ்வென்ன 
என்ற உண்மையைத் தான் 
தன்மொழியில் சொல்கிறதோ மழலை!

காற்றோடு
தீயோடு
பறவையோடு
விலங்கோடு
என எதோடு பேசினாலும் தன் மொழியிலேயே பேசுகிறது மழலை!

மழலை மொழி பொருளற்றது
என நம் கல்வியறிவு புறம்தள்ளினாலும்
இனிமையானது என உள்மனது சண்டைக்குவருகிறது!

கடவுள் இல்லையென்றே நீண்ட காலமாகச் சொல்லிவந்த
மனது இப்போதெல்லாம் சொல்கிறது

மழலையின் மொழியே கடவுளின் மொழி என்று..

ஒப்பீடு..
குழலினிது யாழினிது என்பார்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

(திருக்குறள் 66)

தொடர்புடைய இடுகை

மேலும் சுவாசிக்க"எல்லோருக்கும் பிடித்த ஒரே மொழி!"

Tuesday, February 14, 2012

உயிர்களைப் புதுப்பிக்கும் வேதியியல் மாற்றம்!

வாழ்க்கையை அகம், புறம் என வகுத்த மரபல்லவா நம் மரபு!
“களவும் கற்று மற”
என்று களவியலும் - கற்பியலும் வகுத்து
களவு என்னும் காதலுக்கும் ஒரு காலஅளவுண்டு
களவுக் காதல் சில நாட்களில் திருமணம் செய்துகொண்டு கற்புக்காதலாக மாறவேண்டும் என்று சொன்னவர்களல்லவா நம் முன்னோர்.

நான் காதலர் தினம் கொண்டாடுவதைவிட
காதலைத் தினம் கொண்டாடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.
அதனால் தான் எனது இடுகைகளில் 60 விழுக்காடு காதலைச் சொல்லியிருக்கிறேன்..

காதல் குறித்த எனது சில புரிதல்கள்....


எத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் !
எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை - காதல்!

காதலர்கள் மாறலாம் 
காதல் மாறுவதில்லை!

மண்ணில் உயிர்களைப் புதுப்பிக்கும் 
வேதியியல் மாற்றமே காதல்!

உணர்வுக்கும் அறிவுக்கும் 
இடையே நடக்கும் 
போராட்டமே காதல்!

அறிவின் அனுமதியோடு 
வரும் காதலுக்கு வாழ்நாள் அதிகம்!
உணர்ச்சியின் வேகத்தில் குதிக்கும்
காதலுக்கு வாழ்நாள் குறைவுதான்!

பணம் - காதல் என்னும்
 இரண்டின் பின்னும் பலர் ஓடுகிறார்கள்!

இவ்விரண்டும் சிலர் பின்னால் மட்டுமே ஓடுகின்றன!

காதலிக்கும்போது....

ஐம்புலன்களும் காதலிப்பவர்களுக்கெதிராய் போர்க்கொடி உயர்த்தும்.

 நீ பார்த்ததால் தான் நான் மெலிகிறேன் 
என்று உடல் கண்ணிடம் முறையிடும்!

நீ மெலிவதால் நான் தூக்கம் தொலைந்தேன் 
என்று கண் உடலிடம் எதிர்வாதம் செய்யும்!

சும்மா பேசிக்கிட்டே இருக்காதீங்க 
நீங்க செய்த தவறுக்கு 
என்னை நானே அடித்துக்கொள்கிறேன் 
என தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்ளும் இதயம்!

கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால் எனக்கு வலியில்லை 
என்று நினைத்துவிட்டீர்களா? 
என்று இந்த சண்டைக்கிடையே பாவமாகக் கேட்கும் மனம்!

என்னடா இது குடியிருக்கலாம்னு வந்தா இந்த வீடு சரியில்லையே நான் வீட்டைவிட்டுப் போறேன் என்று 
உடலிடம் உயிர் சொல்லும்!

நான் சொல்றதக் கேட்கப் போறீங்களா இல்லையா?
நான் வேலை நிறுத்தம் செய்தால் உங்க நிலைமை என்ன ஆகும்னு சிந்தித்துப் பாருங்க என்று மூளை வந்து மிரட்டும்.

இது வலியா? சுகமா?

காதலிக்காமலும் சாகக்கூடாது
காதலுக்காகவும் சாகக்கூடாது!

வாழ்ந்துகாட்டனும் அதுதான் காதல்!

தொடர்புடைய இடுகைகள்

மேலும் சுவாசிக்க"உயிர்களைப் புதுப்பிக்கும் வேதியியல் மாற்றம்!"

Tuesday, January 31, 2012

உயிரோடு செத்தவர்கள்!



உயிர் இருக்கிறது
உணர்ச்சி இல்லை!
உதடு இருக்கிறது
சிரிப்பு இல்லை!

என்ன இது?
இக்கால இயந்திரமா?
உற்றுப் பார்க்கிறேன்..

அட!
இவர்கள் மனிதர்கள்தான்!

நீங்களெல்லாம்..
உயிரோடு செத்துவிட்டீர்களா?
இல்லை
செத்தபின்னும் உயிர்வாழ்கிறீர்களா?
என்று கேட்கிறேன்..

நாணயங்களின் ஓசையில் என்
நா நயங்களின் ஓசை
இவர்களுக்குக் கேட்கவில்லை!

மீண்டும் கேட்கிறேன்..
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முகத்தின் அழகு சிரிப்பில்தானே தெரியும்..?

எங்கே உங்கள் சிரிப்பு? என்று..
சிரிப்பை அடக்கம் செய்த
கல்லறைஉதடுகள் திறந்து
இவர்கள் சொல்கிறார்கள்..

ஒன்றை இழந்தால்தானே
இன்னொன்றைப் பெறமுடியும்!

நாங்கள் சிரிப்பை விதைத்து
பணத்தை அறுவடை செய்யும் உழவர்கள் என்று..


மேலும் சுவாசிக்க"உயிரோடு செத்தவர்கள்!"

Tuesday, January 10, 2012

தற்கொலை செய்த அலை..




கடல் அலை வந்து கரையில் கற்கள் மீது மோதி நுரை கக்கிச் செல்லும் போது என் மனது சொல்கிறது...





காதல் சொல்ல வந்தது அலை
அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது கரை
அதனால்
பூச்சி மருந்து குடித்து
தற்கொலை செய்துகொள்ள முயன்றது அலை
அதுதான்
வாயெல்லாம் இவ்வளவு நுரை?

என்று..

கடலையும் இந்தக் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் என் மனது கால இயந்திரமேறி சங்ககாலத்துக்குச் சென்றுவிடுகிறது.
கல்பொரு சிறுநுரையார் என்றொரு புலவர் சங்ககாலத்தில் இருந்தாரே என்று.. 
மேலும் சுவாசிக்க"தற்கொலை செய்த அலை.."

Friday, December 9, 2011

மருந்தில்லா நோய்களுக்கான மருந்து!

காலந்தோறும்...
நோய்களின் பெயர்கள் தான் மாறுகின்றன!
நோய்கள் மாறுவதில்லை!
மருந்துகளின் பெயர்கள்தான் மாறுகின்றன!
மருந்துகள் மாறுவதில்லை!

கண், காது, மூக்கு என ஒவ்வொரு உறுப்புகளையும் ஆய்வு செய்ய ஒவ்வொரு மருத்துவத் துறைகள் வந்துவிட்டன. ஆனாலும் இன்றுவரை எந்த மருத்துவராலும் தீர்க்கப்படாத நோய்கள் பல! அவற்றுள்..

“பிறவி, பசி காதல்” என்னும் மூன்று நோய்களும் குறிப்பிடத்தக்கன.

உயிரின் வேட்கை - பிறவி!
உடலின் வேட்கை - பசி!
உள்ளத்தின் வேட்கை காதல்!

பிறவிநோய்

பிறவிநோய் தீர்ப்பவர் யார்?
கண்ணுக்குத் தெரியாத கடவுளைத் தேடுவதைவிட. அந்தக் கடவுளே நாம் தான் என்தை உணர்வது சிறந்தது.

அந்தந்த மணித்துளிகளில் வாழ்தல்!
சுயநலம் துறத்தல்
பொதுநலம் விரும்புதல் 
ஆகியன நம் மனதில் தோன்றினால் இப்பிறவி ஒரு நோயாகவே தெரியாது. அதற்குப் பிறகும் இப்பிறவி ஒரு நோயாகத் தோன்றினால்...

“கொஞ்சம் கடவுள் நம்பிக்கையும் - நிறைய மனநிறைவையும்”

மூன்று வேளையும் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம்.

பசி

நாம் பல நேரங்களில் வயிற்று மனிதர்களாகவே வாழ்கிறோம். அதனால் நமக்குக் கழுத்துக்குக் கீழே வயிறு மட்டும் தான் பலநேரங்களில் இருக்கிறது. அதனால் பசி ஒரு பெரிய நோயாகத் தான் உள்ளது. வயிறு நிறைய உண்டாலும் மீண்டும் பசிக்கிறது. இந்த நோய் தீர என்ன வழி?

நானறிந்தவரை...

“அளவாக உண்டாலும் அன்போடு வழங்கப்படும் உணவுக்கு பசி என்னும் இக்கொடிய நோயை நீக்கும் ஆற்றல் உண்டு” என்று நம்புகிறேன்.

காதல்

பண்பாட்டுக் கலப்பாலும், திரைப்படங்களாலும் இன்றைய சூழலில் காதல் என்ற சொல்லின் பொருள் நிறையவே மாறியிருக்கிறது.

உள்ளம் சார்ந்த காதல்
உடல் சார்ந்த தேடலாகப் புரிந்துகொள்ளப்பட்டுவருகிறது.

உணவில் உப்பு போல..
காதலின் ஒரு கூறுதான் உடல்..

உணவில் உப்பின் அளவு அதிகமானால்..??

மலரினும் மெலிதல்லவா காமம்!!

காதல் நோய்கான மருந்து...

நிறைய புரிதல்
அவ்வப்போது விட்டுக்கொடுத்தல்
சின்னச் சின்னச் சண்டைகள்...

இம்மருந்துகளை காலை, மாலை, இரவு என உட்கொள்வதால் இந்நோய் தீரும்.

தொடர்புடைய இடுகைகள்

மேலும் சுவாசிக்க"மருந்தில்லா நோய்களுக்கான மருந்து!"

Thursday, December 8, 2011

துளிப்பாக்கள்


வெற்றிக்குத் தேவையான 
எரிபொருள்

“தன்னம்பிக்கை”


சிலருக்கு நோய் 
பலருக்கு மருந்து

“பசி”


அழகின் 
முற்றுப்புள்ளி

“நிலவு”


உயர்ந்தவர்களின் செருப்பு
தாழ்ந்தவர்களின் மணிமகுடம்

“புகழ்”

தவறுகளைக்கூட
தவறின்றிச் செய்யத்தெரியாத அப்பாவிகள்

“சிறைக்கைதிகள்“

பல வண்ணங்களும்
பல நிறங்களும் கொண்ட ஒரே பூ

“சிரிப்பூ”


அறிவின் அடையாளம்
அறியாமையின் குறியீடு

“அமைதி”


மனித அறிவின் எச்சம்
மனித அழிவின் உச்சம்

“அறிவியல்”


தொடர்புடைய இடுகை


மேலும் சுவாசிக்க"துளிப்பாக்கள்"

Saturday, December 3, 2011

ஏழாம்அறிவு உள்ளவரா நீங்கள்?




தாயின் கருவறையைவிட்டு
வெளியே வந்தே
வளர்க்கவேண்டியதாகவுள்ளது
ஏழாம் அறிவு!

தந்தை தேடித்தந்தாலும்
அடிக்கடி
தொலைந்துபோகிறது
ஏழாம் அறிவு!

எப்படிப் பெறுவது என்று
ஆசிரியர் கற்றுத்தந்தாலும்
புரிவதே இல்லை
ஏழாம் அறிவு!

எத்தனை புத்தகங்கள்
எடுத்துச் சொன்னாலும்
மறந்துபோகிறது
ஏழாம் அறிவு!

ஏழாம் அறிவு
இல்லாதவர்களுக்கு
ஆறு அறிவு இருந்தாலும்
மதிப்பே இருப்பதில்லை!

ஏழாம் அறிவு மட்டும்
இருந்துவிட்டால்
அவர்களைச் சுற்றி....

கைகட்ட
வாய் பொத்த
ஆமாம் ஆமாம்
 என்று தலையாட்ட
ஆயிரம்ஆயிரம்
வயிற்று மனிதர்கள்!!

ஆம்
இந்த ஏழாம் அறிவின்
இன்னொரு பெயர்
“பணம்“

இதைப்
புரிந்துகொள்வதிலும்
புரியவைப்பதிலுமே
வாழ்க்கை
தொலைந்துபோகிறது!


தொடர்புடைய இடுகை


மூன்று வகை மனிதர்கள்
மேலும் சுவாசிக்க"ஏழாம்அறிவு உள்ளவரா நீங்கள்?"

Friday, December 2, 2011

கனவு வியாபாரிகள்!

கடவுள் நம்பிக்கைகளை
உண்டியலில் 
சேர்க்கத் தெரிந்த
மதவாதிகள்!

தனிமனித ஆசைகளை
நடித்துக்காட்டி
நடந்ததாக நம்பச் செய்யும்
திரைத்துறையினர்!

சிவப்புதான் அழகின் நிறம்
என்று
மூளைச் சலவை செய்யும்
விளம்பரக்காரர்கள்!

எல்லாம் மக்களுக்காக
என்று சொல்லி ஆட்சிக்குவந்து
தன் மக்களுக்காகவே சேமிக்கும்
அரசியல்வாதிகள்!

பிள்ளைகளைப் பற்றிய
பெற்றோரின் கனவுகளைக் 
காசாக்கத் தெரிந்த
தனியார் கல்வி நிறுவனங்கள்!

கட்டிப்போட்டு 
சோம்பேறியாக்கி
விளையாட்டுக்காட்டியே காசுபறிக்கும்
தொலைக்காட்சிகள்!

ஆளும்கட்சிக்கு
ஆமாம் சாமி போட்டு
பக்கம்பக்கமாக பொய்யை விற்கும்
நாளிதழ்கள்!

பலவீனத்தை வைத்தே 
பலன் சொல்லிப்
பணம் பார்க்கும் 
சோதிடக்காரர்கள்!

என 
நம்மைச் சுற்றிலும்
கனவு வியாபாரிகள்!!

நாமும்கூட
சிலநேரங்களில் 
கனவுவியாபாரிகளாகவே
வாழ்ந்துதொலைக்கிறோம்!

தனிமனிதக் கனவுகளை
வியாபாரம் செய்வதும்
கற்பை வியாபாரம்
செய்வதும் வெவ்வேறா??

என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை!!
மேலும் சுவாசிக்க"கனவு வியாபாரிகள்!"

Wednesday, November 30, 2011

காற்று - ஆணா? பெண்ணா?


எங்கும் நிறைந்தது கடவுள் என்றால்..

என் மனம் காற்றின் இன்னொரு பெயர்தான் கடவுளா? 
என்று கேட்கிறது.

இந்த உலகில் ஆண், பெண் என்றபாகுபாடு உயர்திணை மட்டுமின்றி, அஃறிணையிலும் உண்டு...

கடலில் கூட அதன் சீ்ற்றத்தை வைத்து ஆண், பெண் எனப் பாகுபாடு செய்வார்கள்.

நிலவைப் பெண் என்றும் பரிதியை ஆண் என்றும் கவிஞர்கள் பாடுவார்கள்.

தாவரங்களில் கூட ஆண் பெண் பாகுபாடு செய்வதுண்டு..

இவற்றையெல்லாம் பார்க்கும்போது எனக்கும் மனதில் ஒரு கேள்வி தோன்றியது. 

காற்று ஆணா? பெண்ணா? என்று..

தென்றல், வாடை, கொண்டல், கோடை என்று இலக்கியங்களும் 

அறிவியலும் காற்றைப் பலவாறு பாகுபாடு செய்திருக்கின்றன.

இருந்தாலும் இந்த சராசரி சிந்தனைகளைக் கடந்து காற்று எனக்கு 

பெண்ணாகவும், ஆணாகவும் தெரிகிறது..


மரங்களின் 
இலைகளாய்
சலசலக்கும்போது...

மழலையின்
தலைமுடி
கோதும்போது..

மலரின் வாசத்தை
ஊரெல்லாம் 
சொல்லும்போது...

குழலின்
வழியே
இசையாகும்போது...

பறவைகள்
மொழியில்
ஒலியாகும்போது...

!காற்று பெண்ணாகிறது!


பேரலையாய் 
கரையை 
மிரட்டும்போது...

பெருங்காற்றாய்
மக்களைச் 
சிதைக்கும்போது...

வாடைக்காற்றாய்
மக்களை 
வதைக்கும்போது...

பறையின் 
வழியே
இசையாகும்போது..

விலங்குகளின்
மொழியில் 
ஒலியாகும்போது..

இடித்தாலும்
மேகமாய்
மழைபொழியும்போது..

!காற்று ஆணாகிறது!

தொடர்புடைய இடுகை


மேலும் சுவாசிக்க"காற்று - ஆணா? பெண்ணா?"

Tuesday, November 29, 2011

உயிரற்றுப் போன உயிர்கள்!

சில 
நடத்துநர்களின் பார்வையில்
மனிதர்கள் யாவரும்
பயணச்சீட்டுகளாகவே தெரிகின்றனர்!

சில 
ஓட்டுநர்களின் பார்வையில்
விபத்துக்குள்ளாகும் உயிர்கள்
தம் சாலைவிதி மீறலின்
ஒறுத்தல் கட்டணமாகவே புலப்படுகின்றனர்!

சில 
அரசியல்வாதிகளின் பார்வையில்
வாக்காளர்கள் யாவரும்
சிந்திக்காமல் ஓட்டுப்போடும் 
இயந்திரங்களாகவே காட்சியளிக்கின்றனர்!

சில 
மருத்துவர்களின் பார்வையில் 
நோயாளிகள் யாவரும் 
தம் மருத்துவமனைக்கு நிதியுதவி செய்யவந்த 
வங்கிகளாகவே தெரிகின்றனர்!

சில 
ஆசிரியர்களின் பார்வையில்
மாணவர்கள் யாவரும்
தேர்ச்சி விழுக்காடுகளாகவே 
பதிவுசெய்யப்படுகிறார்கள்!

சில 
மாணவர்களின் பார்வையில்
ஆசிரியர்கள் யாவரும்
பாடம் கற்பிக்கும்
 இயந்திரங்களாகவே உணரப்படுகின்றனர்!

சில 
செய்திவாசிப்பாளரின் பார்வையில்
பலியான உயிர்கள் 
எதுகை மோனையோடு சொல்லப்படும் 
எண்ணிக்கையாகவே உள்ளனர்!

மனிதர்கள் பார்வையில்..
உயிர் உள்ளவையெல்லாம்
உயிரற்றுப் போகின்றன

உயிரற்ற பணம் மட்டும்  
உயிராக மதிக்கப்படுகிறது!


தொடர்புடைய இடுகைகள்

மேலும் சுவாசிக்க"உயிரற்றுப் போன உயிர்கள்!"

Wednesday, November 9, 2011

மூன்று வகை மனிதர்கள்

நான் என் வாழ்வில் கண்ட மனிதர்களை மூன்று வகையாகப் பாகுபடுத்தி உணர்ந்திருக்கிறேன்..

இவ்வகைப்பாடுகளுள் நான் என்றும் மூன்றாம் வகை மனிதனாகவே இருந்திருக்கிறேன்..
இருக்க முயற்சித்து வருகிறேன்..
இதோ என் வகைப்பாடு..







சிந்திப்போர் 
செயல்படுவோர்
சிந்தித்துச் செயல்படுவோர்!

அறிவுடையோர்
ஆற்றலுடையோர்
அறிவை ஆற்றலுடன் வெளிப்படுத்துவோர்!

சிரிக்காதவர்
சிரிப்பவர்
சிரிக்கவைப்பவர்!

பேசாதவர்
பேசுபவர்
பேசவைப்பவர்!

மாறாதவர்
மாறுபவர்
மாற்றுபவர்!

கருவிகளை நம்புவோர்
கடவுளை நம்புவோர்
தன்னை நம்புவோர்!

வாழ்க்கையைத் தொலைத்தவர்
வாழ்க்கையைத் தேடுபவர்
வாழப் பிறந்தவர்!

காலத்தின் பின்னால் ஓடுபவர்
காலத்தின் முன்னல் ஓடுபவர்
காலத்துடன் செல்பவர்!

வாய்ப்பில்லை என வாடுவோர்
வாய்ப்புகளைத் தேடுவோர்
வாய்ப்புகளை உருவாக்குவோர்!


வரலாறு பேசுவோர்
வரலாறு படிப்போர்
வரலாறு படைப்போர்!

துடிப்போர்
எடுப்போர்
கொடுப்போர்!

பிறரைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றிப் பேச வைப்பவர்!

தவறு செய்வோர்
தண்டனை தருவோர்
தவறுகளையும் தவறின்றிச் செய்வோர்!

அறிவுரை கேட்போர்
அறிவுரை சொல்வோர்
அதன் படி வாழ்வோர்!

என்ன நண்பர்களே என் வகைப்பாடு பிடித்திருக்கிறதா..

இதில் நீங்க எந்த வகை மனிதராக இருக்கிறீர்கள் என்று தன்மதிப்பீடு செய்துகொள்ளுங்கள்..

தொடர்புடைய இடுகைகள்


மேலும் சுவாசிக்க"மூன்று வகை மனிதர்கள்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக